திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சேது மற்றும் அஜித். இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பரணி என்பவருடன் இணைந்து சிங்கிரிபாளையத்தில் உள்ள கரியகாளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த 10 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேது, அஜித் மற்றும் பரணியை, கோயில் உண்டியல் கொள்ளை வழக்கில் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் மாஜிஸ்திரேட் தமிழரசு முன்னிலையில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கைதி இருவரும் போலீசாரை திசை திருப்பிவிட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து தனித்தனியாக ஆளுக்கொரு புறமாகத் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடிய இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய 2 கைதிகளை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பியபோது, கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.