தமிழ்நாடு

கோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்? - நீதிபதி விசாரணை

webteam

கோவை மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடந்த 2015 முதல் கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துவரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் இறந்த ராமசாமியின் தலையிலும் உடம்பிலும் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து இவரது உடலை 3வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.  உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா? அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா ? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், உடற்கூராய்வு முடித்த பிறகு கோவை மத்திய சிறையில் நீதிபதி வேலுச்சாமி விசாரணை நடத்தினார். 

இதுதொடர்பாக சிறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜிடம் விளக்கம் பெற தொடர்பு கொண்டும் முடியவில்லை. தொடர்ந்து சிறை கைதி ராமசாமி உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமசாமியுடன் ஒரே அறையில் இருந்த சுப்பிரமணி, சுரேஷ் ஆகிய இருவர் கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.