Prince Gajendra Babu pt web
தமிழ்நாடு

மக்களை பிரித்து சமூகத்தை தனித் தனியாக வைக்கிறது ஜாதி - பிரின்ஸ் கஜேந்திர பாபு

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் கல்லூரியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத் திட்டத்தில் சாதி உழைப்பிற்கான பாடம் என்ற தலைப்பில் ஒருநாள் பணிமனை நடைபெற்றது. இதில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர் ரத்தின சபாபதி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்கள், கல்வியியல் செயல்பாட்டாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கக் கூடிய சகோதரத்துவத்தை ஒவ்வொரு மாணவரும் உணரக் கூடிய வகையில் பாடத்திட்ட வாயிலாக பல செயல்பாடுகளை நடத்துங்கள் என்று சொல்வதுதான் கல்வி ஏற்பாடு. இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசமைப்புச் சட்டம் முன்வைக்கக் கூடிய விழுமியங்களை மாணவர்கள் தங்களுடைய வாழ்வியல் விழுமியங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக் கூடிய விழுமியங்களும், சமூகத்தின் விழுமியங்களும் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று மாணவர்களுக்கு தெரிய வேண்டும்.

அந்த வேறுபாடு தெரியும் பொழுதுதான் எது நல்லது எது கெட்டது என்று மாணவர்களால் பகுத்து ஆராய முடியும். தீமைகளை விட்டு விட்டு இந்திய அரசியலமைப்பு சொல்லக் கூடிய சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை, சமத்துவத்தை மாணவர்கள் உயர்த்திப் பிடிக்க முடியும். அதற்கு தடையாக ஜாதி என்ற கருத்தியல் உள்ளது. ஜாதி என்பது ஒரு பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை, அது ஒரு கெட்ட வார்த்தை, அது மக்களை பிரிக்கிறது, மக்களை பிரித்து சமூகத்தை தனித்தனியாக வைக்கிறது என்றால் அதை நல்ல வார்த்தை என்று சொல்ல முடியாது. அதனால் ஜாதி என்ற கெட்ட வார்த்தையை மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது.

பள்ளிக் கூடத்தில் மட்டுமில்லாமல் தங்களுடைய வாழ்க்கையின் விழுமியங்களாக மாணவர்கள் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு பாடத் திட்டத்தை வடிவமைக்க எந்த அளவிற்கு பாடத் திட்டத்தில் ஜாதி ஒழிப்பை கொண்டு வர முடியும் என்பதற்கான பணிமனை இன்று நடந்தது. மேலும் இந்த கருத்தரங்கில் ஏற்படக் கூடிய ஆலோசனைகளை அரசிடம் சமர்ப்பிப்போம்" என்று கூறினார்.