அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களையும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க மாநிலங்களவை வாய்ப்பளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த அவையில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் நிகழ்ந்துள்ளது. பல வரலாறுகளை படைத்துள்ளது. தொலைநோக்குடன் செயல்படும் அவை இது.
தேர்தல், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது என்ற நம்பப்பட்டது. ஆனால், அது நடந்தேறிவிட்டது. அதேபோல்தான் ஜிஎஸ்டி மசோதாவும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிலும் மாநிலங்களவையின் பங்களிப்பை நிராகரித்துவிட முடியாது. மாநிலங்களவை என்பது இரண்டாம் அவைதானே தவிர, இரண்டாம்தர அவை அல்ல என்று வாஜ்பாய் ஒரு முறை கூறினார்” என்றார்.