#BREAKING | வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி  pt web
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்... இன்றைய பயணத்திட்டம் என்ன?

ராமேஸ்வரத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பயண திட்டம் குறித்து பார்க்கலாம்.

PT WEB

தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10:08 மணிக்கு அவர் திருச்சி வந்தார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையிலுள்ள ஹெலிபேடு தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கிருந்து, 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு துளைக்காத காரில் சென்ற பிரதமர், வழி நெடுகிலும் நின்ற மக்களைப் பார்த்து காரில் நின்றவாறு கையசைத்தபடி வந்தார். அப்போது டன் கணக்கில் கொண்டு வரப்பட்ட மலர்களை பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அவர் மீது தூவி வரவேற்றார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

கோயிலில் பிரதமருக்கு, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் தங்க குடத்தில் பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்றனர். கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, தாயார், ரங்கநாதர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலம் மேற்கு கோபுரவாசல் அருகே உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்ற பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி..!

ராமநாதசுவாமி கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்தக் கடலில் பிரதமர் மோடி புனித நீராடினார். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடிய பிரதமர் மோடி, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் பிரகாரத்தை வலம் வந்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரணகும்ப மரியாதை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வழிபாடுகளை முடித்தபின் ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி எளிய முறையில் தங்கினார்.

இந்நிலையில் இன்று காலை ராமகிருஷ்ண மடத்திலிருந்து சாலை வழியாக பிரதமர் மோடி தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்றார். அங்கு நடைபெறும் யாகபூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து கோதண்டராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

ராமபிரான், ராவணன் தம்பி விபீஷணருக்கு புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கிருந்தும் பிரதமர் மோடி அயோத்திக்கு புனித நீரை எடுத்துச் செல்கிறார். அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.