தமிழ்நாடு

”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!

”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!

webteam

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு மாறிமாறி புகழாரம் சூட்டினர்.

சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கோவை கொடிசியா அரங்கத்திற்கு பிரதமர் மோடி காரில் வந்தடைந்தார்.

பின்னர், மேடைக்கு சென்ற பிரதமர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரதமருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அப்போது, “எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழ் மொழியின் சிறப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து எடுத்துரைத்து வருவது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடியின் சென்னை பயணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 14 ஆம் தேதி சென்னையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே தமிழகம் அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் முழுவதும் பயன்படுத்தும் வகையிலான திட்டங்கள் நிறைவேற்றம். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கீழ் பவானி திட்டத்தை விரிவு படுத்துதல், புதுப்பித்தல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தார். நெய்வேலியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தையும் தொடங்கி வைத்தார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருப்பூர் உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க அடிக்கல் நாட்டினார்.