தமிழ்நாடு

நிதியும் ஒதுக்கவில்லை ! பணியிடமும் நிரப்பப்படவில்லை !

நிதியும் ஒதுக்கவில்லை ! பணியிடமும் நிரப்பப்படவில்லை !

தமிழக வனத்துறையில் காட்டுத் தீயை தடுக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ பற்றிக்கொண்டது. இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி தவித்தவர்களில் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வனத்துறை உயர்அதிகாரி கூறியது "தமிழக வனத்துறை எப்போதும் ஜனவரி மாதம் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். அதற்கு "பைஃயர் வாட்சர்" என்ற பணியிடம் உருவாக்கப்படும். அவர்களுக்கான வேலை தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது மற்றும் காடுகளை தீ பரவாமல் கண்காணிப்பது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தமிழகத்தின் பல்வேறு காட்டுப்பகுதிகளில் தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்படவில்லை. தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்பவர்கள் வனத்துறையின் கடைநிலை களப் பணியாளர்கள்தான்.
இதனை கண்காணிக்க வேண்டியது வன காவலர் மற்றும் வன கண்காணிப்பாளர். ஆனால், தமிழக வனத்துறையில் 50 சதவித பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. 3000 ஆயிரம் ஹெக்டர் காட்டுக்கு ஒரு வன கண்காணி்ப்பாளர் இருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களால் ஒரு வன கண்கணிப்பாளர் 6000 ஆயிரம் ஹெக்டர் காட்டை பாதுகாக்க வேண்டியுள்ளது. மதுரை வனக் கோட்டத்துக்கு, மண்டல வன அலுவலர் (Conservator for forest) பதவி கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது" என்கிறார் அவர்.