தமிழ்நாடு

உதகைக்கு குடியரசுத் தலைவர் வருகை: ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

உதகைக்கு குடியரசுத் தலைவர் வருகை: ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

kaleelrahman

நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் தனி ஹெலிகாப்டர் மூலம் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தடைந்தனர்.

கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்து, பின்னர் வாகனம் மூலம் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் சென்றடைந்தார்.

தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 6ஆம் தேதி வரை உதகையில் தங்கி, பைக்காரா படகு இல்லம் உட்பட சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல உள்ளார்.

இன்று காலை 10.20 மணிக்கு குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லும் குடியரசுத் தலைவர் 527 இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 50 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பயிற்சி முடித்ததற்கான பட்டயங்களை வழங்குகிறார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.