காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அத்திவரதர், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல இடங்களிலும் இருந்து பக்தர்கள், அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். விஜயகாந்த், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் அத்திவரதரை ஏற்கெனவே தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று குடும்பத்துடன் வந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் வந்தார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் வருகையால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மதியம் 3 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் செய்தார்.