நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறந்த பொதுச் சேவைக்காக 16 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 21 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளும், 2 காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பான பணிக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏடிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் கோவை காவல் பயிற்சி பள்ளியின் உதவி காவல் ஆய்வாளர் சபரிநாதன் ஆகியோருக்கு சிறப்பான பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, சிவகங்கை மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், க்யூ பிரிவு டிஎஸ்பி யோகோபு உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 71 காவலர்களுக்கும், மகாராஷ்ட்ராவின் 47 பேருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் விருதுகள் 16 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, கூடுதல் காவல்துறை இயக்குநர் கந்தசுவாமி, கூடுதல் காவல் ஆணையர் தினகரனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.