தமிழ்நாடு

“2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த்

“2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த்

webteam

ரஜினிகாந்த் தெளிவான முடிவை சொல்லியுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்கள், மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகினால்‌, அரசியலில்
புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும் என ‌நம்புவதாக தெரிவித்தார். தன்னை வருங்கால முதல்வர் என அழைப்பதை விடுத்து, மாற்றத்திற்கு மக்களை
தயார்படுத்தவும் தனது ரசிகர்களை ரஜினி அறிவுறுத்தினார்.

இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே அரசியலுக்கு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தார். அப்படியே கட்சித்தொடங்கினாலும், தனக்கு
முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய
அவர், “ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர்மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல்
நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி
கூறுகிறார். வருகிற 2021‌‌ தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்ற‌ம் தமிழக அரசியலில் நிகழப்போவது
உறுதி என்பது எங்களது கருத்தும் கூட”எனத் தெரிவித்தார்.