தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியை நடிகர் விஜயகாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி மதுரையில் தொடங்கி அக்கட்சியின் தலைவராக, அவரே இருந்துவருகிறார். அப்போது நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன் என்பவர், தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து, தேமுதிக முதன்முதலாக, கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளான கடயநல்லூர், திருநெல்வேலியில் மோதிரம் சின்னத்திலும் களம் கண்டது தேமுதிக. இந்த தேர்தலில் தேமுதிக தரப்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து 15வது மக்களவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாரானது. கடந்த 2009ஆம் ஆண்டு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் களமிறங்கியது. அதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் களம் கண்டது. தேமுதிகவிற்குத் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவித்தபோது, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முரசு சின்னம் ஒதுக்க இடைக்கால தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலின்போது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த்.
பின்னர் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது. அந்த அணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். ஆனாலும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது தேமுதிக.
பின்னர் மேடைகளில் பேசுவதை விஜயகாந்த் அதிகளவில் தவிர்த்து வந்ததால், மக்கள் மத்தியில் அறியப்படாமல் இருந்து வந்தார். தேமுதிக என்ற ஒரு கட்சி பெருமளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றது மட்டும் இல்லாமல் தேமுதிக கட்சியின் பொருளாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 31, 1990 அன்று விஜயகாந்த்தை மணந்தார். பின்னர் 2005, செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதிகவைத் தொடங்கியதிலிருந்தே பிரேமலதா கட்சியில் சேர்ந்து அதை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 19 தேதி தேமுதிக பொருளாளராகப் பொறுப்பேற்றார்.
அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தங்களைத் தீவிரமாகத் தயார்ப்படுத்தி வரும் நிலையில் தேமுதிகவும் தங்களுடைய பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச்சூழலில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. அப்போது தேமுதிக தொண்டர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் நீண்ட காலம் கழித்து தொண்டர்கள் முன் தோன்றி கை அசைத்தார். இதனைப் பார்த்த தொண்டர்கள் பலர் உற்சாக மிகுதியில் கொண்டாடியபோதிலும் விஜயகாந்த்தை நீண்ட நாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் சில தொண்டர்கள் கண்ணீர்விட்டுக் கதறியது நம்மால் காணமுடிந்தது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்டவருட இடைவெளிக்குப் பிறகு தேமுதிக பொதுச்செயலாளர், மாற்றத்தால் கட்சியில் என்ன மாற்றங்கள் வரப் போகிறது என்பதும், என்னென்ன வளர்ச்சிகள் ஏற்படப் போகிறது என்பது தே.மு.திக தொண்டர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டாலும் தற்போது இருக்கக்கூடிய அரசியல் களங்கள் அவருக்கு பெரும் சவாலாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இரா. விமல்ராஜ்