பிரேமலதா விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

“ஏன் தேர்தலை நடத்துகிறீர்கள்..? ஆட்சியாளர்களை அறிவித்துவிடலாமே! எல்லாம் வீண்..” பிரேமலதா விஜயகாந்த்

PT WEB

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் யாருக்கும் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையை இல்லாததாலேயே, இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

தருமபுரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் இந்த முறை நாங்கள் போட்டியிடவில்லை என்றால், கடந்த முறை ஈரோடு இடைத்தேர்தலில் நடந்தது மிக மிக கேவலமான ஒரு தேர்தல். மக்களை ஆட்டு மந்தைகளை போல் அடைத்துவைத்து, ஜனநாயகத்திற்கு எதிராக மக்களை அடிமைப்படுத்தி, அவர்களது வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி மிக மிக தவறான தேர்தலை ஈரோட்டில் முன்னெடுத்தார்கள்.

இதை எத்தனையோ முறை தேர்தல் ஆணையத்திடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். எந்தப்பலனும் இல்லை. தேர்தல் ஆணையம் நிச்சயமாக அவர்களது வேலையை செய்யவில்லை. எத்தனையோ சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். முதலில் கொண்டு வரவேண்டியது தேர்தல் ஆணையத்தில்தான். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சுத்தமாக சரியில்லை. பின் ஏன் தேர்தலை நடத்துகிறீர்கள்? யார் அடுத்த ஆட்சியாளர்களை அதை அறிவித்துவிடலாமே...! எல்லோருடைய நேரமும் பணமும் உழைப்பும் வீண்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்

எவ்வளவு உழைத்தாலும் ஓட்டுக்கு பணமும் இலவசமும்தான் அங்கு நிற்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்துகொண்டிருக்கிறது? தவறு செய்த வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. இதுவரை தேர்தல் ஆணையத்தின் மூலம் எந்த நியாயமும் யாருக்கும் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.