ராதிகா, மாணிக்கம் தாகூர், விஜயபிரபாகரன், பிரேமலதா pt web
தமிழ்நாடு

"சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டாரா விஜயபிரபாகரன்?" - பிரேமலதா குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

“39 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து வருகிறீர்களே, கடைசி நொடி வரை ஒரு இளைஞர் போராடி வருகிறார், பெரிய மனதுடன் நீங்கள் அவரை வெற்றி பெற வைத்திருந்தீர்கள் என்றால் இந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்றிருப்பேன்” என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

Angeshwar G

விருதுநகர் மக்களவைத் தொகுதி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் ஆரம்பத்திலேயே முடிவுகள் தெரிந்துவிட்டன என்றாலும் சில தொகுதிகளில் இறுதிக் கட்டம் வரை முடிவுகள் மாறி மாறியே வந்தன. உதாரணமாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி தொகுதியையும் சொல்லலாம்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து பிற்பாதிவரை முன்னணியிலேயே இருந்த சௌமியா அன்புமணி இறுதிக் கட்டத்திலேயே 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். விருதுநகர் வேட்பாளரான விஜயபிரபாகரனோ முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் மாறி மாறி வந்து, 4379 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.

ராதிகா, மாணிக்கம் தாகூர், விஜயபிரபாகரன், பிரேமலதா

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகளைப் பெற்ற நிலையில், விஜயபிரபாகரன் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில்தான், விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த். விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு அளித்துள்ளது. விருதுநகரில் மதியம் 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுவாக்கு எண்ணிக்கைக் கோரி மனு

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துள்ளோம். எத்தனையோ முறைக்கேடுகளைப் பார்த்துள்ளோம். அதற்காக நீதிமன்றத்திற்கு சென்றதையும், 5 ஆண்டுகள் கழித்து அதற்கான தீர்ப்புகள் வந்ததையும் பார்த்துள்ளோம். 5 தொகுதிகளில் போட்டியிட்டோம். பிறதொகுதிகளில் நான் ஏன் கேட்கவில்லை. மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வென்றார்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.

50, 60 வருடங்களாக கட்சி நடத்துகிறீர்கள்; ஆட்சியிலும் இருக்கின்றீர்கள். சின்னபையன் முதன்முறையாக தேர்தலில் நிற்கிறார்; அவர் ஜெயித்தால்தான் என்ன? 39 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து வருகிறீர்களே, கடைசி நொடி வரை ஒரு இளைஞர் போராடி வருகிறார், பெரிய மனதுடன் நீங்கள் அவரை வெற்றி பெற வைத்திருந்தீர்கள் என்றால் ஒந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்றிருப்பேன்.

அதிலும் சூழ்ச்சி செய்து, அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டரே, என்னால் அழுத்தம் தாங்கமுடியவில்லை, என் போனை சுவிட்ச் ஆஃப் செய்கிறேன் என சொல்லக்கூடிய அளவு அவரது மனநிலையை கொண்டு செல்லும் அளவிற்கு தவறு நடந்துள்ளது. மீண்டும் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

சாதி அரசியல் தோல்வியுற்றுள்ளது - மாணிக்கம் தாகூர்

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர், “வாக்கு எண்ணிக்கையின்போது, விஜயபிரபாகரன் அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும்போது மக்களிடம் தவறான செய்தியை கொண்டுசெல்லும் போக்கு கண்டிக்கத்தக்கது. தேர்தல் அதிகாரிகள் கடுமையாக உழைத்து நேர்மையாக தேர்தலை நடத்தி நள்ளிரவு 1 மணிக்கு முடித்தார்கள். தேர்தல் நடத்திய அதிகாரிகள் மேல் குற்றம் சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிமுக வாக்குவங்கியை வைத்து தேர்தலில் நின்றார்கள்; தோற்றுள்ளார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு அங்கிருந்த அதிமுக அமைச்சர் எல்லாம் அமைதியாகதானே சென்றார்கள். பிரேமலதா அரசியல் தோல்வியுற்றுள்ளது, சாதி அரசியல் தோல்வியுற்றுள்ளது; அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே” என தெரிவித்தார்.

புகார் எதுவும் வரவில்லை - தலைமை தேர்தல் ஆணையர் சாகு

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், “தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தைத் தான் நாடமுடியும். தேமுதிக, விருதுநகர் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.