தமிழ்நாடு

கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன் ! ஆண் குழந்தைக்காக நிகழ்ந்த கொடுமை

கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன் ! ஆண் குழந்தைக்காக நிகழ்ந்த கொடுமை

jagadeesh

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எட்டு மாத கர்ப்பிணியை கணவனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து கொலைக்கு காரணமான ஆறு நபர்களை கைது செய்யக்கோரி, இறந்துபோன கர்ப்பணியின் உறவினர்கள் மற்றும் கிராம வணிகர்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தசரதன் (எ) மணிகண்டன். இவருக்கும் சோபனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நான்காவது முறையாக சோபனா கர்ப்பமாகியுள்ளார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று தசரதன் தன் 8 மாத கர்ப்பணி மனைவியடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை மூர்க்கமாக தாக்க தொடங்கிய அவர் கொடூரமாக அடித்துக்கொலை செய்தார்.

இந்தக் கொலை தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தசரதன் மற்றும் தாய்மாமன் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் மேல்செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இறந்துபோன சோபனாவின் மாமனார், மாமியார், கணவனின் சகோதரி, சகோதரியின் கணவர் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முன்னிரவு இறந்துபோன சோபனாவின் உடலை மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ மனையிலிருந்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு நேற்று முற்பகல் காவல்துறையினர் எடுத்து சென்றனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நான்கு நபர்களை கைது செய்யக்கோரியும், இரண்டு தினங்கள் ஆகியும் சோபனாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்காத காவல்துறையினரை கண்டித்தும் சோபனாவின் உறவினர்கள் மற்றும் கிராம வணிகர்கள் தங்களுடைய வணிக நிறுவனங்களை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தசரதனின் இருசக்கர காகனத்தை தீ வைத்து எரித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட சோபனாவின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காவல்துறையினர் சோபனாவின் கொலைக்கு காரணமான மணிகண்டனின் அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் கணவர் ஆகிய நான்கு நபர்களை தேடி கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.