ramya pt
தமிழ்நாடு

"50 சவரன் பத்தாதுனு இன்னும் கேட்குறாங்க; கணவரை பார்க்க விட மாட்டிங்கிறாங்க"-நிறைமாத கர்ப்பிணி வேதனை!

50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கின்றனர்

யுவபுருஷ்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா அழகாபுரி கிராமத்தை சேர்ந்த லட்சுமண நாராயணன் - தமிழரசி தம்பதியின் மகள் ரம்யா. இவருக்கும், கரூர் அடுத்துள்ள காதப்பாறை ஊராட்சி அன்புநகர் 2 வது கிராஸை சேர்ந்த கனிமொழி என்பவரது மகன் கவியரசனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. ரம்யா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கவியரசன் தாய் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் கரூர் தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிலையில், 6 மாத கர்ப்பிணியாக உள்ள மருமகள் ரம்யாவிடம் அடிக்கடி பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வரதட்சணை கேட்டும், கணவன் மனைவியை சேர்ந்து வாழ விடாமல் மாமியார் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

விவகாரம் குறித்து ரம்யா கூறுகையில், ”2 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எனது கணவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி, எனது பெற்றோர் வீட்டிற்கு மாமியார் கனிமொழி என்னை அனுப்பிவிட்டார். சில நாட்கள் கடந்த நிலையில், எனது கணவரை சந்திக்க வரும்போதும், கணவரை தனிமையில் சந்திக்கவும் மறுக்கிறார். 50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கிறார்” எனத் தெரிவித்தார்.

கர்ப்பமாக இருக்கும் தான் கடந்த 3 மாதமாக வேகாத வெயிலிலும் வந்து வீட்டுக்கு முன்பு காத்திருப்பதாகவும், வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு கதவை திறக்காமல் மாமியார் கொடுமை செய்வதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் அம்மாவுடன் மாமியார் வீட்டுக்குச் சென்ற ரம்யா அங்கு அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கர்ப்பிணி கோரிக்கை வைத்துள்ளார்.