தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளான டெல்டா மாவட்டங்களில் நாளை தமிழக அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கண்களாக விளங்கும் கவிநாடு கண்மாயில் நீர் வரத்து அதிகமாகி அதிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கீடு செய்வதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நானும் இடம் பெற்றுள்ளேன். இந்த மழையால் குறிப்பாக நாகை மாவட்டத்தில் சராசரியாக 27 செ.மீ மழை பெய்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு நாளை டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல உள்ளோம். தமிழக முதல்வர் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்.
தமிழக முதலமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பருவ நிலை மாற்ற துறைக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்து காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை உடனடியாக வழங்கப்படும்" என்றார்.