தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

Veeramani

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பழுதுநீக்கம், வாயில் மூடிகளை சரிபார்த்தல் அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் இன்று நடைபெற்ற முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, மத்திய கைலாஷ், இந்திரா நகர், திருவான்மியூர் உள்ளிட்ட 9 இடங்களுக்கு அடுத்தடுத்து சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார். பணிகளை விரைவாக முடிக்கவும், மழையின் போது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளவும் அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.