தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக : தொடருமா ஐ-பேக்கின் வெற்றிக் கதை

பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக : தொடருமா ஐ-பேக்கின் வெற்றிக் கதை

webteam

தேர்தல் அரசியலில் வெல்வதற்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிப்பது, மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை பெற முயல்வது என்பதெல்லாம் தாண்டி, கார்ப்பரேட் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பியிருக்கின்றன. இதற்காக உதவுவதற்கென்று, அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கென்று சில கார்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் நம்பர் ஒன்னாக இருப்பது ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி”. இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரஷாந்த் கிஷோர்.

குஜராத்தில் 2012இல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வர் ஆக பிரஷாந்த் கொடுத்த ஆலோசனைதான் காரணம் என பேசப்பட்டது. அதன் பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றது. இதற்கு பின்புலமாக நின்றது பிரஷாந்த்தின் ஐபேக். அதேபோல், 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் நிதீஷ்குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார் பிரஷாந்த். இதில் நிதீஷ் குமார் வெற்றிபெற்றார். மகிழ்ச்சியடைந்த நிதீஷ் குமார் பிரஷாந்த்தை தனது கட்சியின் துணைத்தலைவராக அறிவிக்கும் அளவிற்கு போனார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்ததால் கட்சியில் அவர் தற்போது நீக்கப்பட்டது தனிக்கதை.

முந்தைய சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே வென்று பலவீனமான நிலையில் இருந்தது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். ஆனால் 2019 தேர்தலில் ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். இதற்கு பின் செயல்பட்டது பிரஷாந்த்தின் ப்ரமோசன் ஐடியாக்கள். மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முதல்வர் மம்தா பேனர்ஜியே, பிரஷாந்த் கிஷோரை நாடியிருக்கிறார். இருவரிடையிலான சந்திப்பு கொஞ்ச காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளும் பிரசாந்த் கிஷோரை நாடி வருகிறார்கள். அவரை தமிழகத்தில் முதன் முதலாக நேரடியாக அணுகியது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தான். கமல்ஹாசனுடன் விவாதித்த பிறகு பிரஷாந்த் குழு கள ஆய்வில் இறங்கியது. அது அளித்த அறிக்கையின்படி மக்கள் நீதி மையம் இலக்கை அடைய இன்னும் 90% தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. 2021 தேர்தலில் கமல் நினைப்பது எல்லாம் சாத்தியமில்லை. வேண்டுமானால் 2026’ல் பார்க்கலாம் என்று சொன்னார்களாம்.

2021’ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிவியூகம் வகுக்க பிரஷாந்த் கிஷோரை பயன்படுத்தப் போவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதி செய்யப்பட்டவில்லை. இதனிடையே சமீபத்தில் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ரஜினி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுகவும் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், திமுக உடன் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் கைகோர்த்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று உறுதி செய்துள்ளார். ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள் ஐ-பேக் அமைப்பின் கீழ் 2021 சட்டசபை தேர்தலுக்காக எங்களுடன் பணியாற்ற உள்ளனர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி. அத்துடன், நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி மீண்டும் மாநிலத்தில் முன்பிருந்த பெருமையை நிலைநாட்ட உதவுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஐபேக் நிறுவனம் சார்பில் ட்விட்டரில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.