தமிழ்நாடு

21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்

webteam

21 குண்டுகள் முழங்க  எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73) புதுச்சேரியை சேர்ந்தவர். 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கொடுத்துள்ள இவர், ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுதவிர தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். 

அவரது உடல் புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர் உடலுக்கு இன்று காலை தேசியக்கொடி போர்த்தி, அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்‌சலி செலுத்தினர். 

இந்நிலையில் இன்று மாலை எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. அனைவரின் அஞ்சலிக்கு பிறகு சன்னியாசிதோப்பு இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க  எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.