பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மொத்தம் இதுவரை 38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,705ஆக உள்ளது.
இதில், சென்னையில் மட்டும் 27,398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,875 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு செய்யப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவின் மருத்துவர் பிரதீப் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.