தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் முகநூல்
தமிழ்நாடு

“1996-க்குப் பிறகு நேற்றுதான் சென்னை அதீத மழையை பெற்றுள்ளது” - பிரதீப் ஜான் சொல்லும் விவரம்!

"சென்னையில் ஜூலை மாத சராசரி மழையளவு 100 மி.மீ. ஆனால், கடந்த 1 மணி நேரத்தில் 60 மிமீ மழை பெய்துள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தலைநகர் சென்னையில் நேற்று மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்திய நிலையில், இரவு திடீரென மேகங்கள் கூடி மழை பெய்ய ஆரம்பித்தது.

குறிப்பாக சென்னை கிண்டி, அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், பள்ளிக்கரணை, பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், மேடவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. வேளச்சேரியை அடுத்த செம்பாக்கம் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கோவையில் இருந்து சென்னை வந்த இன்டிகோ விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தற்போது பல இடங்களில் இரவில் மட்டும் நன்கு மழை பெய்து வருகிறது. மழையின் அளவை பொறுத்தவரை கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு, எல் - நினோ ஆண்டாக அமைந்தததால் தென்மேற்குப்பருவமழை வழக்கத்தினைவிட குறைவாக பெய்தது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று பெய்த மழையின் அளவு குறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி,

“தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் மிகக் கடுமையான மழை வீதம் காணப்பட்டது. சென்னையில் ஜூலை மாதம் மொத்தமாக 100 மி.மீதான் மழை பெய்யும். ஆனால், நேற்று வெறும் 1 மணி நேரத்தில் 60 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 60% ஆகும். கடந்த 1996க்கு பிறகு சென்னை அதிக அளவு மழைப்பொழிவை பெற்றிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.