வடகிழக்கு பருவமழை PT
தமிழ்நாடு

இன்று நள்ளிரவு முதல்.. சென்னை மக்களே உஷார்! பிரதீப் ஜான் கொடுத்த முக்கியமான அப்டேட்!

சென்னை கடற்கரைக்கு வெளியே நிலைகொண்டுள்ள மேகங்கள் மேலும் வலுவடையும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாட்டை செய்துகொள்ளும்படி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Rishan Vengai

வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி சென்னையில் 15-ம் தேதி மற்றும் 16-ம் தேதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. உடன் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதிகளில் தொடங்கும் நிலையில், இம்முறை 5 நாட்களுக்கு முன்பே தொடங்கவிருப்பதாகவும், வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.

தொடங்கியது வடகிழக்கு பருவமழை..

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாக இன்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையில் தமிழ்நாடு பொதுவாக பெறும் மழையின் அளவு 44 செமீ. ஆனால், இந்தாண்டு இயல்பை விட நூறு சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருமழை முன்பாகவே தொடங்குவதற்கு காரணம், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதிதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை..

சென்னையில் எப்போதும் வடகிழக்கு பருவமழையின் போது தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தமுறையும் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தற்போது சென்னை மக்களுக்கு முக்கியமான அப்டேட்டையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சென்னை கடற்கரைக்கு வெளியே நிலைகொண்டுள்ள கடுமையான மேகங்கள் ஒருங்கிணைந்து, தீவிரமடைந்து நகருக்குள் செல்ல தயாராக உள்ளன. இதன் அடுத்த சுற்று மிகவும் கடுமையான மழைபொழிவை நகரத்திற்கு கொண்டு வரவிருக்கிறது. சென்னையில் கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 15 செமீ மழைப்பொழிவை தாண்டியுள்ளது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நள்ளிரவில் இருந்து பல இடங்களில் 20 செமீட்டரை தாண்டியுள்ளன.

வரவிருக்கும் மழை நீண்டதாகத் தெரிகிறது, நள்ளிரவில் மேலும் வலுவடைந்து மழைப்பொழிவானது 25 செமீ-ஐ கடக்கவிருப்பது, இதன் பாதிப்பு வட சென்னையில் அதிகமாக இருக்கும்.

போன் மற்றும் லேப்டாப் இரண்டையும் சார்ஜ் போட்டு வச்சிக்கோங்க!!!

அப்பார்ட்மென்ட்ல தண்ணிக்கு மோட்டார் போட்டு வெச்சுக்கோங்க !!!

அவசியத்தேவை இல்லையென்றால் வெளியே வர வேண்டாம் !!!” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 16-ம் தேதியான நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.