வானிலை - பிரதீப் ஜான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“சுட்டெரிக்கும் சூரியன்... வரலாறு காணாத வெயில்! வரும் வாரங்களில் குறைய வாய்ப்பு” - பிரதீப் ஜான்

webteam

சென்னை, நாகை, ஈரோட்டை தொடர்ந்து மதுரை விமான நிலைய பகுதியிலும், செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலைய பகுதியில் 41 டிகிரி செல்சியசும், மதுரை நகரில் 40.8 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவானது. வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் குறைந்தபட்சம் 24.8 முதல் அதிகபட்சம் 35.7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலை இருக்கும்.

இந்த ஆண்டு செப்டம்பரில் அதிகளவு வெப்பம் பதிவாகி வருவதற்கு, தொடர்ந்து ஒரு மாதமாக வறண்ட வானிலை நிலவுவதே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஒரு மாதமாக மழை மற்றும் மேகங்கள் இல்லாததும், வறண்ட காற்று வீசுவதுமே வெப்பம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

அவர் மேலும் கூறுகையில், “வட மாநிலங்களில் வரும் நாட்களில் காலை வெயிலும், மாலையில் ஆங்காங்கே மழையும் பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலயே தொடரும். 25ம் தேதிக்குப்பின் மழை அதிகமாகும் என கணிக்கிறோம். இப்படி தொடர்ந்து 30 - 40 நாட்கள் வெப்பம் இப்படி இருந்தால், அதன் இறுதியில் நல்ல மழையை நாம் பெறுவோம். அப்படி இம்முறையும் செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் தொடக்கம் வரை நல்ல மழையை பெறுவோம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது” என்றுள்ளார்.