பிரபாகரன் pt web
தமிழ்நாடு

ராமஜெயம் கொலைவழக்கில் திருப்பம்? பிரபாகரன் என்பவர் கொடூரக் கொலை.. திருச்சியில் பரபரப்பு

ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்த ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமஜெயம் கொலைக்கு முக்கிய ஆதாரமான வெர்ஷா கார் விவகாரம் பிரபாகரனுக்கு தெரியும் என தகவல்.

PT WEB

திருச்சி புத்தூர் ஆபீசர் காலனி வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

பிரபாகரன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் ராமகிருஷ்ணன் என்பவருக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட இடப்பிரச்சனையில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் கைதாகி சிறை சென்றார். சமீபத்தில் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகளில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றும் (11.12.2023) இரவு 7:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்ந்து அருகில் உள்ள தனது அலுவலகத்தில் உறவினர் ராஜாமணியுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். ராஜாமணியின் பிறந்தநாள் பார்ட்டியில் மதுஅருந்தி கொண்டே, வெர்ஷா கார் விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ.டி தொடர்ந்து விசாரிப்பதாகவும் மீண்டும் விசாரணைக்கு செல்ல வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

பின்னர் ராஜாமணி அங்கிருந்து புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார். சில நிமிடங்களில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி தள்ளினர். நாலு பேரில் ஒருவர் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் 2 சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும் இவருக்கும் கார் வாங்கி விற்பது தொடர்பாக பிரச்சனை இருந்து அதில் இருவருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை (09.12.2023) சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 4 பேர் கொண்ட கும்பலால் பிரபாகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர், ஏற்கனவே இவர் திருட்டு கார் விற்பது தொடர்பாகத்தான் சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வர வேண்டும் என தகவல் கொடுத்த நிலையில் பிரபாகரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமே கார். திருட்டு கார் மற்றும் வேறுவகை வாங்கி விற்று வந்தவர் பிரபாகரன். கொலைக்கு பயன்படுத்திய அந்த வெர்ஷா வகை கார் அப்பொழுது பிரபாகரன் விற்பனை செய்துள்ளதாக புதிய தலைமுறைக்கு பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது. வெர்ஷா வகை காரை எந்த ரவுடிக்கு பிரபாகரன் விற்றுள்ளார் என்பது தெரிந்தால் ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகளை சிறப்பு புலனாய்வு குழு நெருங்கி பிடித்து விடும் என்பதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வீட்டிலிலிருந்து நடைப்பயிற்சிக்கு சிறிது தூரம் நடந்து சென்றபோது கடத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நிபந்தனை பிணையில் உள்ள பிரபாகரன் கையெழுத்து போட்டு விட்டு எதிரே உள்ள அவருடைய ஸ்ரீ தாயார் ஹோம் நர்சிங் கேர் சர்வீஸ் கடையில் வந்து அமர்ந்துள்ளார். 9:35 மணி அளவில் அவர் கொலை செய்த பட்டிருக்கலாம் என சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.