விவசாயிகள் மரணம் குறித்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிடாதது வருத்தம் அளிப்பதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி விவசாயிகள் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவரும் ஆன மு.க.ஸ்டாலினை சந்தித்து பி.ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் இன்றி தினம்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் ‘விவசாயிகள் மனம் தளரவேண்டாம். தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்’ என முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறும் வகையில் அறிக்கை வெளியிடாதது வருத்தம் அளிக்கிறது என்றார்.
வர்தா புயலால் தமிழகத்திற்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கை தவறானது என ராஜ்நாத் சிங் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், வேண்டுமென்றே தமிழகத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பாண்டியன் குற்றம்சாட்டினார்.