கரூரில் பல்வேறு இடங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலை, சமுதாய கூடம், மயான கொட்டகை உள்ளிட்ட பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் கோடை சீசனில் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க 3 மாத காலத்துக்கு தேவையான மின்சாரத்தை டெண்டர் மூலம் கோரப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் தமிழக அரசுக்கு 1,312 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது என்றார்.
2 மாத காலத்துக்கு முன்னர் 40 கோடி யூனிட் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எந்தவித தடையும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டது. கோடைகால தேவையை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பரிலேயே ஒரு யூனிட்டுக்கு ரூ.8.50 மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இல்லாமல் எக்ஸ்சேன்ஜில் மின்சாரம் வாங்கியிருந்தால் 12 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
கோடை காலத்தில் ஒரு நொடிப்பொழுது கூட மின்தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மின்சாரம் தேவைப்பட்டாலும் மின்வாரியம் சமாளிக்க தயாராக உள்ளது என்றார்.