தமிழ்நாடு

வறுமையின் கொடுமை - உணவுப்பொருட்களை கழிவறைக்குள் பாதுகாக்கும் முதியவர்

வறுமையின் கொடுமை - உணவுப்பொருட்களை கழிவறைக்குள் பாதுகாக்கும் முதியவர்

webteam

வறுமையின் காரணமாக முதியவர் ஒருவர் உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாக்கும் அவலம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் துளசாபுறம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் கூலி தொழிலாளியான குப்பன். இவரது மனைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற அவரது மகனும் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை எனச் சொல்லப்படுகிறது. இவர் தற்போது தனது 85 வயது தாய் ரஞ்சிதம் அம்மாளுடன் ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

முதியவர் குப்பனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடல் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் தற்போது எந்த வேலையையும் செய்ய இயலாது எனச் சொல்லப்படுகிறது. ஊர் மக்கள் உதவியால் வாழ்வாதாரத்தைக் கடத்தி வரும் இவர்களின் வீட்டில் கதவு இல்லாததால் உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இது குறித்து முதியவர் குப்பன் அவர்கள் கூறும் போது “ ஓலை குடிசை வீடு அங்காங்கே விரிசல் விட்டு அபாயகரமாக உள்ளது. மழை காலங்களில் மழை நீர் வீட்டினுள் புகுந்து விடும். வெறும் துணியால் மட்டுமே கதவைப் பூட்டி வைத்திருக்கிறோம். அன்றாட உணவுக்கு பொதுமக்கள் உணவுப் பொருட்களைத் தந்து உதவுகின்றனர். வீட்டில் கதவு இல்லாததால் வீட்டில் சமைத்து வைக்கும் பொருட்களை எலி, பூனை எடுத்துவிட்டுச் சென்று விடுகிறது. இதனால் உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாக்கின்றோம். பலமுறை முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த போதும் எந்த பலனும் இல்லை.

ஜூலை மாதம் நடைபெற்ற ஆன்லைன் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகைக்கான மனுவை விண்ணப்பித்தேன். மனுவை ஏற்றுக்கொண்ட மேலதிகாரிகள் அந்த மனுவை கிராம நிர்வாக அலுவலரின் மேற்பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்யாமல் வயது தகுதி இல்லை என்று அந்த மனுவை நிராகரித்து விட்டார். ஆகவே எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்