மயிலாடுதுறையில் ஊரடங்கு முடக்கத்தால் நூற்றுக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தரங்கம்பாடி, வேட்டங்குடி, காட்டுச்சேரி, தில்லையாடி, சிங்கான் ஓடை, மணல்மேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலை சார்ந்து நூற்றுக்காணக்கான குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. பொங்கல் நேரத்தில் மட்டுமே சிறு லாபம் பார்க்கும் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள், ஆண்டு முழுவதும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தற்போதை காலகட்டத்தில் விற்பனையாகும் தொகை மண் வாங்கும் செலவை கூட ஈடுசெய்வதில்லை என தெரிவித்த அவர்கள், அதிலும் கொரோனா ஊரடங்கு வந்து தங்களை உணவுக்கே வழியற்ற நிலைக்கு தள்ளிவிட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து முடங்கியதால் மண்பாண்ட பொருட்களை வாகனத்தில் கொண்டு செல்ல முடியவில்லை என்றும், வாரச்சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.