சிறையில் உயிரிழந்த தந்தை- மகன் உடல்களை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். அவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. காவல்துறையினர் தாக்கியதாலேயே தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாக சாத்தான்குளம் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடற்கூறு பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் நீதித்துறை நடுவர் முன் உடற்கூறு பரிசோதனை நடைபெற வேண்டும் எனவும் பரிசோதனை முழுவதும் வீடியோப் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை மகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார். இறந்தவர்களின் உடலை அங்க அடையாளங்களின் அடிப்படையிலும் உறவினர்கள் அடையாளம் காட்டியத்தின் அடிப்படையிலும் உறுதி செய்து கொண்ட நீதிபதி உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அரசு மருத்துவக் குழு மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு 8.10 மணிக்கு செல்வமுருகன், பிரசன்னா, சுதன் என்ற மூன்று அரசு மருத்துவர்கள் முதலில் பென்னிக்ஸ் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவரது தந்தையின் உடலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இரவு சுமார் 11.35 மணி அளவில் இருவரின் உடற்கூறு ஆய்வு முடிவடைந்தது. மருத்துவர்களின் அறிக்கை அடிப்படையிலும் நீதிபதியின் விசாரணை அடிப்படையிலும் நீதிபதி 26 ந் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.