தமிழ்நாடு

அதிமுகவுக்கு தலைமை ஓபிஎஸ் தான் - போஸ்ட்டரால் சலசலப்பு

அதிமுகவுக்கு தலைமை ஓபிஎஸ் தான் - போஸ்ட்டரால் சலசலப்பு

ஜா. ஜாக்சன் சிங்

அதிமுக தலைமை பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என தேனியில் பரவலாக போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அடுத்த தலைவர் யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. முதலில் சசிகலா அந்தப் பதவிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் சிறைக்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். இருந்தபோதிலும், கட்சியின் தலைமை பதவியை யார் வகிப்பது என்பதில் இருவருக்கு இடையே பனிப்போர் நிலவி வந்தது. ஒருகட்டத்தில், இருவரின் ஆதரவாளர்களும் பொதுவெளியில் மோதிக்கொள்ளும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது. இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு தலைவர் யார் என்ற சர்ச்சை அவ்வப்போது வெடித்து வருகிறது. அந்த வகையில், சென்னை அதிமுக தலைமை அலுவலக்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் சிலர் கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் ஓபிஎஸ் தான் கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக சார்பில் நகரின் முக்கிய இடங்களான காந்தி சிலை, தேரடி, கண்ணாடி கடை முக்கு உள்ளிட்ட பகுதிகளில் "அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுக தலைமையை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஃப்ளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்ட்டர்களால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.