தமிழ்நாடு

'கடல் கடந்த காதல்...!' விருதுநகரில் போர்ச்சுகல் மணமகளை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை!

'கடல் கடந்த காதல்...!' விருதுநகரில் போர்ச்சுகல் மணமகளை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை!

webteam

போர்ச்சுக்கல் நாட்டு பெண்ணை காதலித்து இந்து முறைப்படி விருதுநகர் இளைஞர் திருமணம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் - விஜயகுமாரி தம்பதியினர். இவர்களின் மகன் கார்த்திக், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு லண்டனில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்கு தன்னுடன் பணியாற்றி வரும் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் ஒலிவேரா - நடலியா பாப்பிஸ்ட்டா தம்பதியரின் மகள் கேட்டியா ஒலிவேரா என்ற மீனாட்சியை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு கார்த்திக் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து போர்ச்சுக்கல் மணப்பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவருடன் பணிபுரியும் நைஜீரியாவைச் சேர்ந்த தோழி ஒருவர் பெண் வீட்டார் சார்பாக அனைத்து சடங்குகளையும் செய்தார். கடல் கடந்த இந்த காதல் மணமக்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.