வழக்கறிஞர் பொற்கொடி முகநூல்
தமிழ்நாடு

பொற்கொடி To பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L.’

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கு நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் தன் பெயரையும் மாற்றியிருக்கிறார். யார் இவர்? பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் - சுகன்யா

1974 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாள் சென்னை பெரம்பூரில் உள்ள பந்தர் கார்ன் பகுதியில் ரயில்வே ஊழியர் திருநாவுக்கரசு - விஜயலட்சுமி தம்பதியின் மகளாகப் பிறந்தார் பொற்கொடி. ஒரு அண்ணன், இரண்டு மூத்த சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த 4 ஆவது பெண் குழந்தை இவர்.

பந்தர் கார்டனிலே பள்ளிப் படிப்பை முடித்த பொற்கொடி ஆந்திர மாநிலம் திருப்பதியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்து 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டவர். இவருக்கு பின்பு 2009 ஆம் ஆண்டில்தான் ஆம்ஸ்ட்ராங்க் பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.

தன் வீட்டின் அருகிலேயே 5 வீடுகள் தள்ளி வாழ்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை சிறு வயது முதல் பார்த்து பழகிய பொற்கொடிக்கு அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இயல்பானது.

31.01.1972 ல் பிறந்த ஆம்ட்ராங்கை விட 2 வயதுதான் இளையவர் பொற்கொடி. 20 ஆண்டுகள் இளையவர் என எழுதப்படும் செய்திகள் தவறானவை. 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்தாலும் பொற்கொடியின் காதல் திருமணத்தில் முடிந்தது 2016 ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியில்தான்.

இலங்கை, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட புத்த பிட்சுக்கள் இவர்களுக்கு பௌத்த வழியில் திருமணத்தை நடத்தி வைக்க அது முதல் தீவிர பௌத்தரானார்.

பொற்கொடி

திருமணத்திற்கு பின் 7 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு கடந்த ஆண்டு (2023) மார்ச் 14 ஆம் தேதிதான் தாயானார் பொற்கொடி. பொற்கொடி - ஆம்ஸ்ட்ராங் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். திருமணத்திற்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி பகுஜன் சமாஜ் கட்சியில் நேரடிப் பொறுப்பு வகிக்கவில்லையே தவிர வட சென்னை பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்திருக்கிறார் பொற்கொடி. கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்துள்ளார்.

அதே போல், தென்னிந்திய புத்த விகாரின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் இவர் புத்தரின் நெறிமுறைகளை மக்களுக்கு விளக்குதல், பௌத்த திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்தல், சமத்துவத்தை வலியுறுத்தும் பவுத்த பிரசாரங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

பெரம்பூர் பந்தர் கார்டனில் ஆம்ஸ்ட்ராங் உருவாக்கி புத்த விஹாரின் மேல் தளத்தில் செயல்பட்டு வரும் அனிதா கற்றல் மையத்தில் வைத்து கல்விச்சேவையும் புரிந்து வருகிறார்.

திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L.

இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங்க் கொல்லப்பட்ட 17 ஆவது நாளில் தனது 49 ஆவது வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L., என்ற பெயர் மாற்றத்துடன் தனது நேரடி அரசியல் வாழ்வை தொடங்கியுள்ளார் பொற்கொடி. ஆர்ம்ஸ்ட்ராங் என்பதை மட்டுமே தனது அடையாளமாகக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் , பொற்கொடி என்ற இதுவரையிலான தன் சுய அடையாளத்தை துறப்பதாகவும் அறிவித்துள்ளார்.

புத்தர் படம் பெரியதாக பொறிக்கப்பட்ட தான் அணிந்திருக்கும் தாலியை அகற்றப் போவதில்லை என்றும் தன் கணவரின் நினைவாக அவர் பெயரையும், தாலியையும் இறுதிவரை அணிந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.