தமிழ்நாடு

போராடும் பெண்களுக்கு தமிழன் விருது சமர்ப்பணம்: பூவுலகின் நண்பர்கள்

போராடும் பெண்களுக்கு தமிழன் விருது சமர்ப்பணம்: பூவுலகின் நண்பர்கள்

webteam

கூடங்குளம் முதல் கதிராமங்கலம் வரை போராடும் அனைத்து பெண்களுக்கும் புதிய தலைமுறையின் தமிழன் விருதை சமர்ப்பிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

புதிய தலைமுறையின் சூழலியலாளருக்கான தமிழன் விருது, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தோற்றுவித்த நெடுஞ்செழியனின் மறைவிற்கு பின்னர், 2008ல் மீண்டும் செயல்பட தொடங்கியதிலிருந்து பூவுலகின் நண்பர்கள் சந்தித்த பிரச்னைகள், எதிர்கொண்ட அவதூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளாக இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகளிலிருந்து கவனத்தை சிதற விட கூடாது என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருந்தோம்.

கூடங்குளம் தொடங்கி நியூட்ரினோ வரை நமக்கு கிடைத்த சின்ன சின்ன சட்ட போராட்ட வெற்றிகளும், சிறுதானியம் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர் பிரச்னை வரை மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் இந்த உறுதியிலிருந்தே பிறந்தது. இதன் எல்லா நிலைகளிலும் நிறைய நண்பர்களும் அமைப்புகளும் உடனிருந்திருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது.

நேற்று புதிய தலைமுறையின் தமிழன் விருது பூவுலகின் நண்பர்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூக செயல்பாடுகளில் நம்பிக்கை நட்சத்திரம் விருது. இந்த விருது பூவுலகோடு சேர்ந்து பயணித்த எல்லோருக்குமான அங்கீகாரம். சுற்றுசூழல் பிரச்னைகளுக்கு கிடைத்த கவனம். உங்கள் எல்லோர் சார்பாகவும் இந்த விருதை பொறியாளர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.

பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி போராடுவது ஃபேஷன் ஆகிவிட்டது என்று ஒரு மாநில முதல்வர் சொல்லும் ஒரு அவலமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த அவதூறையும் விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தமது எதிர்கால சந்ததிகளுக்காக முன்னின்று போராடும் கூடங்குளம் முதல் கதிராமங்கலம் வரையிலான எல்லா பெண்களுக்குமே இந்த விருது உரியது” என்று கூறியுள்ளது.