தமிழ்நாடு

பூர்ண சுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் மறுப்பது ஏன்?: அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் கேள்வி

பூர்ண சுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் மறுப்பது ஏன்?: அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் கேள்வி

sharpana

சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை சிம்மக்கல் மணி நகரை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பூர்ண சுந்தரி 4 வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்தியா அளவில் 286வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.  இவருக்கு ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரண சுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ''ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பூரணசுந்தரி கூறியிருந்தார்.

 இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். 

 பின்னர், 2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து 25.09.2020-ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது, மேலும் வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பூரண சுந்தரியின் வழக்கறிஞர் ஏ.கண்ணன், கூறுகையில் " பூரண சுந்தரிக்கு ஒபிசி இட ஒதுக்கிட்டின் படியும், மாற்று திறனாளிகள் நலச்சட்டம் 2016 ன் படியும் ஐஏஎஸ் பணி வழங்கவில்லை, பூரண சுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்குவதற்கு உண்டான அனைத்து தகுதியும் இருந்தும் ஐஆர்எஸ் பணி வழங்கப்பட்டு உள்ளது, இவருக்கு பின்னால் 306 ஆம் இடத்தில் உள்ள ஒருவருக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பணிகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளது" என கூறினார்.