தமிழ்நாடு

`ஓபிஎஸ்-தான் முரண்டு பிடித்து பொதுக்குழுவை நிராகரித்தார்’- பொன்னையன் குற்றச்சாட்டு

`ஓபிஎஸ்-தான் முரண்டு பிடித்து பொதுக்குழுவை நிராகரித்தார்’- பொன்னையன் குற்றச்சாட்டு

நிவேதா ஜெகராஜா

கடந்த ஜூன் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்த பொதுக்குழு செல்லாது எனக்கோரிய ஓபிஎஸ் மனு மீதான வழக்கின் விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், ஜூன் 23 க்கு முன் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து பொன்னையன் புதிய தலைமுறையுடன் பேசினார். அவர் பேசுகையில், `ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற வார்த்தைக்கு ஒத்துழைக்காமல், அதற்கு முரண்பட்டு - முரண்டு பிடித்து - ஒத்துழைக்காமல் இருந்தது ஓ பன்னீர்செல்வம் தானே? அப்படியிருக்க பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் சொல்லியுள்ளனர்.

இந்த தீர்ப்பு சரியான தீர்ப்பா, அல்லது மறுபரிசீலனைக்கு உட்பட்டதா என்பதை பார்க்கவேண்டும். பன்னீர்செல்வம்தான் அன்றைய கூட்டத்தை புறக்கணித்தார். 98% மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், அவருக்கு எதிராக இருந்தனர் என்பதால் அவர் அப்படி செய்தார்.

ஓபிஎஸ்-ம் அவரது மகனும் திமுக ஆதரவாளராக மாறிவிட்டனர். அதனாலேயே தொண்டர்கள் அவரை கட்சியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டனர். பொதுக்குழுவும் அம்முடிவை மதித்தது. மற்றுமொருமுறை பொதுக்குழு கூடினாலும், இதுவே நடக்கும்’ என்றார் அழுத்தமாக.