பொன்முடி - நீதிமன்றம் puthiyathalaimurai
தமிழ்நாடு

பதவியை இழந்தார் பொன்முடி... 3 ஆண்டு சிறை; ரூ.50 லட்சம் அபராதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Angeshwar G

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக் பொறுப்பேற்றவர் பொன்முடி. இவர் பொறுப்பேற்கும் போது அவரது சொத்து மதிப்பு ரூ.2.71 கோடியாக இருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ. 6.27 கோடியாக உயர்ந்துள்ளது என 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 1.7 கோடிக்கு அவரால் கணக்கு காட்டமுடியவில்லை என்பது வழக்கு. 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதில் வழக்கு பதிவு செய்த நிலையில், ஏறத்தாழ 5 வருடம் இந்த வழக்கு நடந்துவந்தது. அதில் 2016 ஆம் ஆண்டு பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

Ponmudi | DMK | MinisterPonmudi | MadrasHighCourt

2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை முதன்முதலில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். இதனை அடுத்து 6 வருடங்களுக்கு பல்வேறு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர். அதன்படி நீதிபதி பாஸ்கரன், நீதிபதி மதிவாணன், நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி இளந்திரையன், நீதிபதி சிவஞானம் வழக்கை விசாரித்த பின் மீண்டும் நீதிபதி ஜெயச்சந்தினுக்கு வழக்கின் விசாரணை சென்றது.

இந்தாண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அனைத்து விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பொன்முடியை விடுவிக்கும் சிறப்பு நீதிமன்ற ஆணையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருந்தார்.

தண்டனை குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமாக தலா ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி வழக்கு

அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வயதையும் , மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும் கூட பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்த தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவியையும், தன்னுடைய திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்துள்ளார் பொன்முடி. சட்டப்பேரவை அதிகாரிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.