பொன்முடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மீண்டும் MLA ஆனார் பொன்முடி... நாளை அமைச்சராக பதவியேற்பு? கடைசி நேரத்தில் ஆளுநர் வைத்த ட்விஸ்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை நிறுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் நகல் வெளியானது... இழந்த எம்.எல்.ஏ. பதவியை மீண்டும் பெறுகிறார் பொன்முடி... மீண்டும் அமைச்சரும் ஆகிறார்?

PT WEB

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பால், பொன்முடி தன் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்த தினங்களிலேயே இழந்துவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து இழந்த தன் எம்.எல்.ஏ. பதவியை (திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி) இன்று மீண்டும் பெற்றுள்ளார் பொன்முடி
பொன்முடி எம்.எல்.ஏ ஆனதன் அடிப்படையில் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது பரிந்துரைக் கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார்.

(பொன்முடி கிட்டத்தட்ட 3 மாதகாலம் அமைச்சராக இல்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆளுநர் ரவி, பொன்முடியின் அமைச்சர் பதவி பிரமாணத்திற்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில், நாளை காலை ராஜ்பவனின் பாரதியார் மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என சொல்லப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுப்பணித்துறைக்கும் தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. திருக்கோவிலூருக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி - ஆளுநர் ரவி

இதுபோன்ற காரணங்களால், அமைச்சராக பொன்முடி நாளை பதவியேற்பார் என கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆளுநர் நாளை டெல்லி செல்வதால், நாளை பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆளுநர் மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். ஆகவே அதற்குப்பின் பொன்முடி அமைச்சராகும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.