தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

webteam

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 20 உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்தது.

ஆனால் பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், சிலைகடத்தல் குறித்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

சிலைக் கடத்தல் குறித்த வழக்கை சிபிஐ மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரே நீடிப்பார் என்றும் புதிய ஆணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.