தமிழ்நாடு

ரூ.1,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் விநியோகம்

ரூ.1,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் விநியோகம்

webteam

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் ரூ.1,000 ரொக்கப்பணமும் கொடுக்கப்படும். பொங்கல் பரிசை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரையிலான 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதா‌ரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13-ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நாளை நியாயவிலைக்கடைகள் விடுமுறை இல்லை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.