தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்துகள் - எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கே பேருந்து நிலையங்கள்..?

பொங்கல் சிறப்பு பேருந்துகள் - எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கே பேருந்து நிலையங்கள்..?

webteam

பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக‌ அரசு இயக்கவுள்ளது.

பொங்கல் திருவிழாவை மக்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த தகவலின்படி, வரும் 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்து இயக்கப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பொங்கல் பண்டிகையை முடித்து திரும்ப வரும் 16 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை திரும்ப 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகளும்‌, பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 9 ஆயிரத்து 370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் விழா முடித்து திரும்ப மொத்தம் 16 ஆயிரத்து 971 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளுக்காக சென்னையி‌ல் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் உள்ள முன்பதிவு மையங்களில் வரும் 9ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் இணையதள முகவரிகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.