தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து கொண்டு வருவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் வந்து இணைந்துள்ளனர். இவர்களின் வருகையால் பாஜக தமிழகத்தில் வலிமையான கட்சியாக அமையும்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாஜகவில் இணைய இருக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத ரீதியாக பிரித்து, அதிகார ரீதியாக அமர்ந்து இருப்பவர்கள் திமுக. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து திமுக எதிர்த்தால் அவர்களை பிணம் தின்னி கழுகுகள் என்று கூற மாட்டேன். ஆனால் அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி ஆராயவில்லை.
இலங்கை தமிழர்களை பற்றி பேச திமுகவிற்கு தகுதியில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என்பதுபோல் தமிழ்நாட்டில் திணிக்கிறார்கள். தமிழை வைத்து அரசியல் செய்து வரும் கட்சி திமுக. தமிழகத்தின் அழிவு சக்தி திராவிடர் கழகம்.
எனவே அவர்களை நம்பி மாணவர்கள் போராட்டம் நடத்த கூடாது. மாணவர்களே எங்களை நம்பி வாருங்கள். அரசியல் லாபத்திற்காக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களை பயன்படுத்த கூடாது. தமிழ் மண்ணில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது. அனைத்து மாவட்டத்திலும் திமுகவின் பகல் வேஷத்தை கண்டித்து வரும் 20-தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தயிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.