தமிழ்நாடு

ஆலயங்கள் ஆலயமாகவே இருக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன்

ஆலயங்கள் ஆலயமாகவே இருக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன்

webteam

ஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது என்று  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டு அதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தலும் போடப்பட்டது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவிலில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம், தஞ்சை பெரியகோயிலில் நடக்கவிருந்த தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பெரியகோவில் விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்னை பொறுத்தவரை ஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது. இந்த பிரச்சனை குறித்து முழு விவரம் தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை. ஆலயங்கள் ஆலயமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ராமர் பிள்ளை விவகாரம் குறித்து பேசிய அவர், ராமர் பிள்ளை விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. ஆதார பூர்வமாக உள்ள நிலையில் அது குறித்து பேச தயாராக உள்ளோம். எதையும் உதாசீனப்படுத்த தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் பெரிய கோவில் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ''கோவில் வளாகத்தில் உரிய அனுமதியுடன் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு? இதை கடவுள் மறுப்பாளர்கள் கூறுவது ஏன்? என்று தெரிவித்து இருந்தார்