உயர் அதிகாரியால் Very Very Poor என அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. இளங்கோவுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 10 காவல் அதிகாரிகளை அண்ணா விருதுக்கு தேர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அவர்களில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.எஸ்.பி. இளங்கோவும் ஒருவர். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் பணியாற்றியபோது Very Very Poor என பெயர் வாங்கியவர் இந்த இளங்கோ எனக் கூறப்படுகிறது.
ஏ மற்றும் பி கிரேடு காவல்துறையினரின் செயல்பாடு குறித்து உயரதிகாரிகள் ஆண்டுதோறும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். அதற்கு Annual Confidential Rrport அதாவது ACR எனப்பெயர். அதனடிப்படையிலேயே ஏ மற்றும் பி கிரேடு காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் விருதுகள் வழங்கப்படும்.
2018 ஆம் ஆண்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் இளங்கோ பணியாற்றியபோது அவரது செயல்பாடு குறித்து அப்போதைய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ACR அறிக்கை அளித்திருந்தார். அதில் இளங்கோ திறமையற்ற அதிகாரி என அவர் குறிப்பிட்டிருந்தார். சொத்து கணக்கை தாக்கல் செய்யாமல் விதிமீறலில் ஈடுபட்டவர், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் 8 நாள்கள் விடுப்பு எடுத்தவர், 264 நாள்களில் எந்த விசாரணையையும் மேற்கொள்ளாதவர் என இளங்கோ மீது புகார்களை அடுக்கியுள்ளார் பொன்.மாணிக்கவேல். மொத்தத்தில் பத்துக்கு 1.9 மதிப்பெண்களை மட்டுமே இளங்கோவுக்கு வழங்கியுள்ளார் அவர்.
ACR அறிக்கை இவ்வாறு இருக்க ஏ.டி.எஸ்.பி. இளங்கோவுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திறமையற்றவராக இருக்கும் இளங்கோவுக்கு சிறந்த அதிகாரிக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டது எப்படி என கேள்வியெழுப்பி தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.-க்கு பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
இளங்கோ போன்ற ஒருவருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டிருப்பது காவல்துறைக்கு இழுக்கு என பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். உரிய ஆதாரம் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யும்படி கூறுகிறார் என சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளித்தவர்களில் ஏ.டி.எஸ்.பி. இளங்கோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.