தமிழ்நாடு

“பொன். மாணிக்கவேல் உண்மையான ஆதாரங்களை தரவில்லை” - அரசு தரப்பு

“பொன். மாணிக்கவேல் உண்மையான ஆதாரங்களை தரவில்லை” - அரசு தரப்பு

webteam

சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க தடை விதித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தும், ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் பதில் மனுவை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது “பொன் மாணிக்கவேல் ஊடகங்களில் மட்டுமே பேட்டி கொடுக்கிறார். ஆனால் உண்மையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில்லை. வெறும் எஃப்.ஐ.ஆர் மட்டுமே அவர் பதிவு செய்கிறார். தமிழக அரசுக்கு எந்தவிதமான தகவல்களையும் அவர் கொடுப்பதில்லை. அவரது விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது. பிரச்னை இருக்கிறது. எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சாட்டுகிறார்” எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். 

அதேபோல் இந்து அறநிலைத்துறை சார்பில் பொன். மாணிக்கவேல் மீது நிறையை குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 

பொன். மாணிக்கவேல் சார்பாக வாதிடப்பட்டபோது, இதுவரை அவரின் செயல்பாடுகள் குறித்தும் அவரால் மீட்கப்பட்ட சிலைகள் குறித்தும் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்து தரமான வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.