அரசு பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகின. 1058 பேருக்கான இந்த தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்வு விடைத்தாள்களில் உள்ளதை விட 200க்கும் அதிகமானோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்படி தேர்வுத்தாள் திருத்தம் செய்த ஊழியர்கள், குறுக்குவழியில் பணி பெற முயற்சித்தவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.