விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

முடிந்தது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் | பதிவான வாக்கு சதவீதம் எவ்வ்ளவு?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

PT WEB

செய்தியாளர்:காமராஜ்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக, நாதக இடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதான எதிர்க்கட்சி அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், 276 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி

வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் ஜனநாயகக் கடமையாற்றினர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்குச் சாவடியில் முதல் ஆளாக மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோன்று பனையபுரத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும் குடும்பத்துடன் சென்று ஓட்டுப் போட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவர் வாக்களிக்கவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுஒருபுறம் இருக்க, இடைத்தேர்தல் களத்தில் கவனிக்கத்தக்க சில நிகழ்வுகளும் அரங்கேறின.

முட்டத்தூர் வாக்குச்சாவடியில் 102 வயதான கண்ணம்மா என்ற மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார். சக்கர நாற்காலி வசதி இல்லாததால் நடந்தே சென்று அவர் ஜனநாயக கடமையாற்றினார்.

இதனிடையே, அறிவானந்தம் என்ற இளைஞர் மணக்கோலத்தில் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று தனது கடமையை நிறைவு செய்தார்.

ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளரை குளவி கொட்டியதால் சற்று பதற்றம் ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் இருந்த குளவிக்கூடு அகற்றப்பட்டபிறகு மக்கள் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கொசப்பாளையம் கிராமத்தில் வாக்களிக்கச் சென்ற பெண்ணை அவரது முன்னாள் கணவர் என அறியப்பட்ட நபர் கத்தியால் தாக்கினார்.

தாக்குதலில் ஈடுபட்டவரை கஞ்சனூர் காவல்துறையினர் கைது செய்தனர். மாம்பழப்பட்டு, கானை ஒட்டன்காடுவெட்டி உள்ளிட்ட இடங்களில் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஒருமணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. பெரும்பாலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.