தமிழ்நாடு

பூச்சிகொல்லிகளால் அழிந்து வரும் மகரந்த சேர்க்கையாளர்கள் !

webteam

விளைநிலங்களில் அதிகரித்து வரும் ரசாயன பயன்பாட்டால் மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாய் இருக்கும் பல பூச்சியினங்கள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பவை மகரந்த சேர்க்கையாளர்களான பூச்சியினங்களே. அவைகளில் முக்கியமானவை தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும். இவை பூக்களில் அமரும் போது, அவற்றின் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தமே, உலகின் 90 சதவீத தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கான உயிராதாரம். 

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தும்பி, வண்ணத்துப்பூச்சி போன்றவை அழிவை நோக்கி செல்வதுதான் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. உலகில் 40 சதவீத பூச்சியினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளால், 360 வகையான பூச்சியினங்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக பூச்சியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். வண்ணத்துப் பூச்சிகளுக்கும், தேனீக்களுக்கும் ஏற்படும் ஆபத்து விவசாய பயிர்களின் அழிவின் முதற்படி என்பதுதான் பலரின் ஆதங்கம்.

செயற்கை உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களுக்கு மாறும் போதே விவசாயிகளின் உற்றத் தோழனான பூச்சியினங்களை காக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதே சமயம், ரசாயன உரங்களுக்கு பழகிய விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கை உரங்களை பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.