பொள்ளாச்சி அடுத்த நாச்சிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கிராமம் வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது இந்த பகுதி மக்களின் புகாராக உள்ளது.
பள்ளி செல்லும் மாணவர்கள் நாள்தோறும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வரும் அவல நிலை உருவாகியுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். "சுமை மிகுந்த புத்தகப் பையோடு நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் தூரம் காலை, மாலை என இருவேளையும் நடந்து சென்று வருவதால் மிகவும் கடினமாக உள்ளது. மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் இருக்கும் நாட்களில் இருள் சூழ்ந்த பாதையில் நடந்து வருவது பயமாக உள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்டால் நாங்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளி செல்ல ஏதுவாக இருக்கும்" என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், "உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை" என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று சார் ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.