தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

rajakannan

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்ககோரி, வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார். 

அந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிபிசிஐடி எஸ்.பி, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை, சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விவரங்களை நீக்கி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மறுப்பு தெரிவித்த சிபிஐ, தமிழக அரசின் புதிய அரசாணை தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், அதுதொடர்பாக விளக்கமளிப்பது ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், புதிய அரசாணை நகலை மனுதாரர் புகழேந்திக்கு வழங்க, தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.